Wednesday, April 18, 2007

மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!

மெரிக்காவின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வாய்ப்புள்ளவராக ஒரு தலைவன் உருவானான். உடனே அமெரிக்க மேலாதிக்க கனவுகளை நனவாக்கும் அதன் ஏஜென்டுகள் அந்த தலைவனை போட்டு தள்ளுவதற்க்கான வேலைகளை செய்யத் துவங்கினர். அதி பயங்கர ஆயுதம் வைத்திருப்பதாகவும் இன்னும் பல பொய்களையும் ஆவணங்களாய் தாயாரித்து உலகை நம்ப வைத்தனர். அதன் பேரிலேயே அந்த நாட்டின் மீது போர் தொடுத்து நாசம் விளைவித்தனர். தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர். ஆனால் இன்று வரை அவர்கள் ஆவணம் என்று ஒன்றை முன் வைத்ததில் இருந்தது எதுவும் நிரூபிக்கப்படவில்லை.


அத்தனைக்கும் அந்த தலைவன் பெரிய அபயாகரமானவர் கிடையாது. அவருக்கே இவ்வளவு பெரிய சதியில் ஈடுபட்டது அமெரிக்க மேலாதிக்க இயந்திரம். அந்த தலைவன் ஈராக்கின் சாதாம் உசைன். ஆனால் வரலாற்றில் இவர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய இரு தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு எதிராக திட்டமிடுவதற்க்கு ஒராண்டு ஈராண்டு அல்ல ஒரு நூற்றாண்டின் முக்கால்வாசி நேரம் செலவழித்து பல ஆவணங்களை, செய்திகளையும் கட்டியமைத்தனர் ஏகாதிபத்திய வெறியர்கள். ஏகாதிபத்தியத்தை சாவின் விழிம்புக்குத் தள்ளிய அந்த தலைவர்கள் ஸ்டாலினும், மாவோவும் ஆவர்.


மாவோவின் மீது அடிவருடிகள் கட்டியமைத்த அரை நூற்றாண்டு பொய்களின் தன்மையை மன்திலி ரிவியுவில் விரிவாக வந்த ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்துகிறார்கள். அந்த கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரை மாவோவின் மீதான அவதூறுகளை முறியடிக்க உதவும் என்று நம்புகிறேன்.


மாவோவின் காலத்தில் சீன குடிமக்களின் வாழ்க்கைத் தரம் பல மடங்கு உயர்ந்தது. இந்தியாவை விட பல மடங்கு மோசமான நிலையிலிருந்த சீனா குறுகிய காலத்தில் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, வேலை நிரந்தரம்., பணி பாதுகாப்பு, மருத்துவம், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ததுடன், பெரும் தொழிற்சாலைகளையும், சிறு தொழிற்சாலைகளையும், கிராம அளவில் புறக்கடை பட்டறைகளையும் கட்டியமைத்து சீனாவை 'முற்றிலும் விவசாய நாடு' என்ற நிலையிலிருந்து தொழில் சார்ந்த நாடாக படு வேகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்த காலகட்டம்தான் சீனாவில் முதலாளித்துவ வளர்ச்சியை நிறைவு செய்து சோசலிசத்தை கட்டியமைத்த சோசலிச புரட்சி கட்டம் ஆகும். இதுதான் வரலாற்றில் மாவோ மீது அவதூறு செய்ய எதிரிகள் பயன்படுத்தும் கிரேட் லீப் ஃபார்வேர்டு என்ற காலம் ஆகும்.


1959-61 காலகட்டத்தில் மாவோவினுடைய பொருளாதார கொள்கைகள் சீனாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியதாகவும் அதில் ஒன்று இரண்டல்ல, பல கோடிக்கணக்கில் மக்கள் மாண்டு போனதாகவும் அவதூறு கிளப்புகிறார்கள். இவர்களின் வண்டவாள புளூகுகளைப் பார்க்கும் முன்பாக சீனா அந்த காலகட்டத்தில் நிகழ்த்திய சாதனைகளைக் கொஞ்சம் பார்ப்போம்.


இவர்கள் பஞ்சம் நிகழ்ந்து பலர் இறந்ததாக கூறும் காலகட்டத்தில்தான்(1949-78) சீனா தனது உணவு தானியம் உற்பத்தி செய்யும் நிலப்பரப்பை 145.9% மும், உணவு தானிய உற்பத்தியை 169.6%வும் உயர்த்தியது. இதே காலகட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை 77% உயர்ந்தது. ஆக சீனாவின் ஒவ்வொரு குடிமகனுக்குமான உணவின் பங்கு அபரிமிதமாக உயர்ந்தது இந்த காலகட்டத்தில்தான். விவசாயத் துறையில் இவ்வளவு வளர்ச்சி இருந்தது எனில் ஏற்கனவே பின் தங்கி போயிருந்த தொழிற்துறை திவாலாகி விட்டதா எனில் இல்லை. தொழிற் துறையில் ஆண்டு சாராசரி வளர்ச்சி 11.2% மாக இருந்தது இந்த காலகட்டத்தில்தான். 1952 சீனா விடுதலை பெற்ற போது நாட்டின் மொத்த உற்பத்தியில் 36% மாக இருந்த தொழிற்துறை 1975-ல் மாவோ மறைந்த பொழுது 72%மாக இருந்தது. விவசாயத் துறை 28% மாக இருந்தது. இத்தனையும் விவசாயத் துறையிலும் அபரிமிதமான வளர்ச்சியை உள்ளடக்கியது எனில் இந்த அசுர வளர்ச்சி வேகத்தை புரிந்து கொள்ள முடியும். இதனை பஞ்சம் என்று இவர்கள் அவதூறு செய்வதில் எந்த ஒரு நேர்மையான நோக்கத்தையும் எம்மால் காண முடியவில்லை.


இன்று தொழிற் வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை கூட்டிக் கொடுப்பதோடல்லாமல் விவசாயிகளை நிலத்தை விட்டு துரத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்று கொஞ்சம் கூட மான ரோசமின்றி சொல்லி வரும் சில அடிவருடிகள். அதாவது தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக விவசாயம் நாசமுற வேண்டும் என்று பச்சையாக பொய் சொல்லும் இவர்கள். விவசாயத்துறையிலும் பல மடங்கு வளர்ச்சி, தொழிற்துறையில் அதீதமான வளர்ச்சியை சாதித்துக் காட்டிய மாவோவின் சீனாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது? இந்த வலுவான சோசலிச கட்டுமானத்தின் பலத்தில்தான் இன்று சீன சந்தை சோசசலிசம் என்ற பெயரில் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை இன்னொரு பதிவில் பார்ப்போம். ஒரு பக்கம் பழைய சோசலிச சீனாவின் போற்றுதற்குரிய சாதனையின் பலத்தையே இன்று சீனாவின் சந்தை சோசலிச உலகமயத்தின் வெற்றிகள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டே இன்னொரு பக்கம் அந்த சாதனைகளை செய்த மாவோ பற்றியும் அவதூறு கிளப்புகிறார்கள் இந்த நயவஞ்சகர்கள்.ரஸ்யாவில் திரிபுவாதம் - சீனா தனித்து நின்று போராடுகிறது:

ஸ்டாலின் காலத்தில்(அதாவது ஒரு நான்கைந்து வருடம்) சீனாவின் வளர்ச்சிக்கு அனைத்து விதமான தொழிற் நுட்ப உதவிகளையும் செய்தது ரஸ்யா. ஸ்டாலினுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த குருச்சேவ் தலைமையிலான புரட்டல்வாத கும்பலின் எதிர்புரட்சி நோக்கத்தை புரிந்து கொண்ட மாவோ அவர்களை ஆரம்பத்திலிருந்தே அம்பலப்படுத்தி வருகிறார். ஸ்டாலினியத்தை கீழ்த்தரமாக விமர்சிப்பதன் மூலம் ரஸ்யாவில் சோசலிசத்துக்கு சீரழிவை உண்டு செய்வதை குருச்சேவ் முன்னெடுப்பதை உணர்ந்து மாவோ அவர்களை அம்பலப்படுத்துகிறார். இதனையொட்டி சீனாவிலிருந்து அனைத்து ரஸ்ய தொழில் வல்லுனர்களும் அங்கு செய்து வந்த திட்ட நகல்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்கள். சீனா எந்த ஒரு ஆதரவும் இன்றி, சுற்றிலும் எல்லா எல்லைப் புறத்திலும் எதிரிகள் மட்டுமே முற்றுகையிட்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலில் தனித்து விடப்படுகிறது.


இப்பொழுது ஆட்சிக்கு வந்து ஒரு சில ஆண்டுகளே ஆகிய நிலையில் சீனா தனியாக நின்று இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கு எதிராக போராடிக் கொண்டே புரட்சியை தொடர்ந்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு பக்கம் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியம், இன்னொரு பக்கம் தனது தொங்கு சதை நாடுகளை சுரண்டிவந்த சமூக ஏகாதிபத்தியம் ரஸ்யா. இந்த நிலையில் சீனாவில் தொழில் வளர்ச்சியை மாவோ சாதித்த விதம் ஒரு படிப்பறிவில்லா ஏழை மாணவனை பெரும் விஞ்ஞான படிப்பிற்க்கு தாயார் செய்யும் பக்குவத்தை ஒத்ததாக இருக்கிறது. ஆம், அந்த முயற்சியில் சறுக்கல்களும், தோல்விகளும் இருந்தன.


'இரண்டு கால்களில் நடப்பது' என்ற முழக்கத்தின் கீழ் வறிய நாட்டுப்புற சீனாவை தொழில் நாடாக மாற்றுகிறார் மாவோ. கனரக பெரிய தொழிற்சாலைகளை கட்டும் அதே நேரத்தில் இணையாக சிறு தொழிற்சாலைகளை கிராமப்புறத்தில் கட்டுவது என்பதைத்தான் அந்த முழக்கம் சுட்டுகிறது. இது வெறும் நாட்டின் வண்ணத்தை மாற்றும் தொழில் புரட்சியாக இல்லாமல் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சியையும், பண்பாட்டு வளர்ச்சியையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருப்பதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டார் மாவோ. இதைத்தான் ஏழை மாணவனின் விஞ்ஞானி கனவை நனவாக்கியது என்று சொல்கிறேன்.


ஆரம்ப காலங்களில் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்ட 'புறக்கடை இரும்பு உலைகள்' என்ற முறையில் தரம் குறைந்த இரும்பே உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் விவசாயிகளை தொழில் முனைவோர்களாக அனுபவப்பெறுவதற்க்கான வாய்ப்பையும் இது வழங்கியது. மாவோ, தான் பாய்ந்து கடக்க விரும்பியவையாக குறிப்பிடும் விசயங்களில் முக்கியமான ஒன்று 'மக்களின் மனோபாவம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி' என்பதும் ஒன்றாகும். இதனை ஈடேற்றும் வகையிலேயே இது போன்ற முறையில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. சில ஆரம்ப கட்ட பின்னடைவுகள், தோல்விகளுக்குப் பிறகு குறுகிய காலத்திலேயே இந்த பாடங்கள் பயனளிக்கத் துவங்கின. சீனா சாதித்துக் காட்டியது.


இதே இடத்தில் இந்தியாவின் பின் தங்கிய நிலையையே சாக்கிட்டு ஏகாதிபத்திய மூலதனத்திற்க்கு குறைந்த விலையில் வளங்களைக் கூட்டிக் கொடுக்கும் தற்குறிகளை ஞாபகப்படுத்திக் கொள்வது தகும். தனது குழந்தை தவழ்ந்து பிறகு அடியெடுத்து வைத்து நடப்பதை காணும் ஒரு தந்தையின் மனோபாவம் எங்கே, குழந்தை அடியெடுத்து வைத்து சொந்த காலில் நின்றால் சுரண்டுவதற்க்கு வழியிருக்காதே என்று அலறி துடிக்கும் அடிவருடிகளின் மனோபாவம் எங்கே.


இன்று மூலதனம் மூலதனம் என்று கூவி அந்த பெயரிலேயே நாட்டை கூட்டிக் கொடுக்கும் அயோக்கியர்கள் நாகரிக கனவான்களாக உலா வரும் போது அன்று சீனா தனது மனித வளத்தையும், மக்கள் புரட்சியின் வெற்றியில் பெற்றிருந்த உற்சாகத்தையும் மட்டுமே மூலதனமாக இட்டு சீனாவின் பொருளாதாரத்தை சுதந்திரமான தன்னிறைவு பொருளாதாரமாக உயர்த்தி சாதனை படைத்தது. எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இன்றி தனது சொந்த பலத்தில் கையூன்றி எழுந்து நின்றது சீனா. மூலதனம் என்ற பெயரில் தனது சொந்த மக்களை கூட்டிக் கொடுக்கும் நாதாரித்தனத்தை சீனா பாட்டாளி வர்க்க அரசு அன்று செய்யவில்லை. இதோ இங்கு அடிவருடிகளுக்கோ நாயினும் தாழ்ந்து நக்கிக் குடித்தால்தான் திருப்தி.


மாவோவின் பிரபலமான 'மக்கள், மக்கள் மட்டுமே அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்' என்ற வரிகள் வெற்று முழக்கமாக இல்லாமல், நடைமுறையிலும் அவர் பின்பற்றிய விசயமாக இருந்தது. சீனாவின் தொழில் வளர்ச்சியாகட்டும், எதிர் புரட்சி கும்பலின் அழிவு வேலைகளுக்கு எதிரான போராட்டமாகட்டும், கொசு ஒழிப்பு போராட்டம் முதல் சீனாவின் துயரமான மஞ்சள் ஆற்றை கட்டுப்படுத்துவதாகட்டு அவர் மக்களை அணி திரட்டியே செய்தார். அதிகாரத்துவமான நடைமுறையின் மீது அவர் எப்பொழுதுமே மிக எச்சரிக்கையாக இருந்து தவிர்த்துக் கொண்டார்.


மாவோ ஒரு வெறியன், மனித உரிமைகளை மதிக்காதவன் என்று நாக்கூசாமல் பொய் சொல்லுபவர்கள், சீனா விடுதலை பெற்றவுடன் எதிரிகளிடம் கூட கருணை காட்டச் சொல்லி கட்சி அணிகளுக்கு அவர் அறிவுறுத்தியதும் அதை நடைமுறைப்படுத்தியதுமே பதிலளிக்கும். இதனை நான் சொன்னால் நம்ப மறுப்பார்கள். ஆனால் சீனாவின் அழிவில் மிக முக்கிய பங்களிப்பு செய்த மங்கோலியாவின் கடைசி பேரரசன் பூயி மன்னன் சீன சிறைச்சாலையில் மனிதனாக மாற்றப்பட்ட வரலாற்றை ஹாலிவுட் படம் 'தி லாஸ்ட் எம்பெரர்' சித்தரிக்கிறது பார்த்து உண்மை என்னவென்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த படத்திற்க்கு 9 ஆஸ்கார் அவார்டுகள் வழங்கப்பட்டதை குறிப்பிட்டால் சிலருக்கு அந்த படத்தின் மீதான நம்பகத்தன்மை கூட வாய்ப்புள்ளது. அதே சீனாவில் மாவோவுக்குப் பிறகு கட்சியின் தலைமைக்கு வந்த சீரழிவு கும்பலின் தலைவர் டெங்கை மாவோ இருந்தவரை விமர்சித்து அம்பலப்படுத்தியே வந்துள்ளார். மாவோ உண்மையிலேயே இவர்கள் சொல்லுவது போல அதிகாரத்துவ நடைமுறையுடையவராக இருந்திருந்தால் டெங்கை எப்பொழுது எப்படியோ கட்டுப்படுத்தியிருக்கலாம்.சீனாவில் பஞ்சம் - ஏகாதிபத்திய புரளிகளின் சுயமுரன்பாடு:

அமெரிக்க ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் 3 கோடி பேர் இறந்தார்கள் என்று, இன்னொரு கும்பல் 7 கோடி பேர் இறந்ததாக சொல்கிறது. பல தரவுகள் சீனாவில் அந்த குறிப்பிட்ட காலத்தில் பஞ்சம் ஏற்ப்பட்டதையே காட்டுகின்றன. ஆனால் இவர்கள் சொல்லுவது போல அதிதமாக உப்பிப் பெருக்க வைக்கப்பட்ட நிலையில் அல்ல. இதனை பிறகு பார்ப்போம் முதலில் இந்த புள்ளிவிவரங்களிலேயே புதைந்துள்ள பொய்களை பார்ப்போம்.


உலகின் மிக பெரிய பஞ்சம் சீனாவில் ஏற்ப்பட்டதாம், நாமும் கூட தினமும் செய்தித் தாள்களில் பார்க்கிறோம், ஆப்பிரிக்காவில் மில்லியன் கணக்கில் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்று. ஆனால் மில்லியன் கணக்கில் இறந்ததாக எங்கும் நாம் பார்க்கவில்லை. ஆனால் சீனாவில் நடந்தது என்று நாம் நம்ப வேண்டும். ஏனேனில் அவ்வாறு சொல்லுவது ஈராக் யுத்தத்தை நியாயப்படுத்திய கனவான்கள் அல்லவா?


பங்களாதேசத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான பஞ்சம் 1974-75ல் ஏற்பட்டது இறந்தவர்கள் அரசு கணக்கின் படி 30,000 பேர். ஆனால் சீனாவில் 3 கோடி பேர் இறந்ததாக நாம் நம்ப வேண்டும். இதனை மீறி சீனா வல்லரசாகிய ரகசியத்தை மட்டும் இந்த நக்கிக் குடிப்பவர்கள் சொல்வதில்லை.


இந்த இடத்தில் சீனாவின் திரிபுவாத கோஸ்டிகள் குறித்து ஒரு சின்ன அறிமுகம் செய்து கொள்வோம். சீன சமூகத்தில் நிலவிய அத்தனை வர்க்கங்களூம் சீன கம்யுனிஸ்டு கட்சியிலும் பிரதிபலிக்கவே செய்தன. ஏனேனில் சீன கம்யுனிஸ்டு கட்சி தனித்து நிற்க்கும் ஒரு அமைப்பு அல்ல. சீன சமூகத்தில் வாழ்ந்து, வளர்ந்தவர்கள் சேர்ந்த அமைப்பே சீன கம்யுனிஸ்டு கட்சி. சீனா கம்யுனிஸ்டு கட்சியில் ஆரம்பத்திலிருந்தே முதலாளித்துவ பாதையாளர்களும், மாவோ தலைமையிலான பாட்டாளி வர்க்க பாதையாளர்களும் போராடி வந்துள்ளனர். இது புரட்சிக்கு முன்பிருந்தே நிலவும் ஒரு விசயம். இவர்கள் மாவோவின் ஒவ்வொரு சோசலிச திட்டங்களுக்கு எதிராகவும் அழிவு வேலை செய்தனர். மாவோவும் ஒவ்வொரு முறையும் மக்களிடம் சென்றே இந்த கும்பலை முறியடித்தார்.


மாவோவுக்கு பிறகு தலைமைக்கு வந்த டெங் சீனாவை முதலாளித்துவ சீரழிவுக்கு திசை திருப்புகிறார். சீன புரட்சி முறியடிக்கப்படுகிறது. இதற்க்கு மாவோவின் பொருளாதார திட்டங்கள் மீது முதலில் புழுதி வாரியிறைப்பது அவசியமாகிறது. இந்த புதிய திரிபுவாத கும்பல் கணக்கின் படி மாவோவின் காலத்தில் 1கோடியே சொச்சம் பேர் இறந்ததாக சொல்கிறார்கள்.


இந்த கும்பல்கள் யாருமே இவர்களது புள்ளிவிவரங்களில் உள்ள படு முட்டாள்தனமான முரன்பாடுகளூக்கு பதில் சொல்லியதேயில்லை(பார்க்க இணைப்பிலுள்ள ஆங்கில கட்டுரை). ஒரு உதாரணத்திற்க்கு1949-ல் சராசரி வாழ்க்கை காலம் 35 வயதாக இருந்து 1970-ல் அது 65ஆக உயர்ந்த மர்மம் குறித்து இவர்கள் பதில் சொல்லுவதில்லை. உலகின் ஆக மோசமான பஞ்சம் நிலவியதாக கதை எழுதும் இவர்கள் அதே காலகட்டத்தில் மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லத்தீன அமெரிக்க நாடுகளை விட சீனாவில் சராசரி மனித வாழ் நாள் காலம் அதிகமாக இருந்த மர்மம் குறித்து எதுவும் சொல்வதில்லை. இந்த விசயங்களையெல்லாம் சீனாவில் பஞ்சம் குறித்து அதீதமாக எழுதிய ஜூடித் பானிஸ்டர் என்பவரே ஒத்துக் கொள்கிறார். இதே பஞ்ச சாவு புரளி எழுத்தாளர்தான் 1984-ல் எழுதும் பொழுது சீனா தனது வருடாந்திர சாவு எண்ணிக்கையை குறைத்ததில் சிறப்பு சாதனை படைத்துள்ளது என்கிறார். சுயமுரன்பாட்டு முத்தண்ணாக்கள். சீனாவில் பஞ்சம் மிக மோசமாக இருந்ததாக சொல்லப்படும் பகுதியில் வாழ்ந்தவர்களை பேட்டி கண்ட ஒரு நிருபரும் அங்கு இவர்கள் சொல்லுவது போல எதுவும் நிகழவில்லை. உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் அந்த காலத்தில் இருந்ததாக உறுதிப்படுத்துகிறார். அந்த நிருபர் மாவோவின் மீது நம்பிக்கைக் கொண்டவர் என்பதால் நாம் அவரது சொற்களை நம்பக் கூடாது. ஏனேனில் ஈராக் பேரழிவு ஆயுதம் போல பல உண்மைகளை அவர் சொன்னதில்லையல்லவா? இதோ அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி விட்டது. ஈரானுக்கு எதிராக அல்கொய்தாவின் துணை அமைப்புக்கு CIA உதவி(The Hindu - Opinion Column 18 April 2007) செய்வதாக செய்தி வருகிறது.


இதில் மிக முக்கியமான விசயம் CIA முதலான உளவு நிறுவனங்கள் இது போல ஆயிரத்தெட்டு எழுத்தாளர்களையும், 'The China Quaterly' போன்ற பத்திரிக்கைகளையும், பல புத்தகங்களையும், சமூக விஞ்ஞான ஆய்வு நிறுவனங்களையும் சீனா குறித்து புரளி செய்திகளை கட்டியமைப்பதற்க்கென்றே பிஸ்கெட்டு போட்டு வளர்த்துள்ளது. சமீப காலங்களில் இந்த எழுத்தாளர்-உளவு நிறுவன கள்ளத் தொடர்பு வெகு விமரிசையாக அம்பலப்பட்டது. இங்கு தமிழ்மணத்தில் கூட புரளிகளை, அதை நாம் புரளி என்று எத்தனை முறை அம்பலப்படுத்திய பின்பும் கூட, கூச்ச நாச்சமின்றி மீண்டும் மீண்டும் எழுதி வரும் சில அடிவருடிகள் யாரிடமிருந்து என்ன பெறுகிறார்கள் என்று தெரியவில்லை.


1959-61 களில் சீனாவில் அதி முக்கியமான பிரச்சனைகள் நிகழ்ந்ததையும், குறிப்பாக பாய்ச்சல் பொருளாதார தந்திரத்தில் சில கொள்கை தவறுகள் ஏற்ப்பட்டதையும் மாவோ ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் ஏற்கிறார். ஆனால் 1959 காலகட்ட பிரச்சனைகளுக்கு பிரதான காரணமாக வறட்சியையும், திரிபுவாத கும்பல்களின் அழிவு வேலையையுமே மாவோ குறிப்பிடுகிறார். ஏனேனில் இதே கொள்கைகளை அவர் எற்றுக் கொண்ட தவறுகளை களைந்து விட்டு நடைமுறைப்படுத்திய பொழுதுதான் சீனா சோசலிச வல்லரசாக மாற முடிந்தது எனும் போது மாவோ சொல்வதை நாம் நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. மாவோ ஸ்டாலினைக் கூட தவறு செய்த பொழுது வெளிப்படையாக விமர்சித்துள்ளார் எனும் போது அவரது நேர்மை குறித்து எமக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் அந்த காலகட்டத்தின் பிற புள்ளிவிவரங்களும் இயற்கை பேரழிவினால் ஏற்ப்பட்ட சாவுகளை உறுதிப்படுத்துகின்றன. இதை விட உறுதியான ஆதாரமாக ஏகாதிபத்திய புரளியாளர்களே சீன பஞ்சம் குறித்தான அனைத்து பொய் விவரங்களுக்கும் மூலமாக இருப்பதைக் கொண்டு அந்த அவதூறுகளின் தரத்தை நம்மால் எடை போட முடிகிறது.


திரிபுவாத ரஸ்யா சீனாவின் காலை வாரிவிட்ட பிற்ப்பாடு ஒரு வேளை சீனா பாய்ச்சல் பொருளாதார திட்டத்தை நடைமுறைபடுத்தியிராவிடில் என்னாகியிருக்கும்? உறுதியாக ஏழ்மையான தனது கிராமப்புற உற்பத்தி முறைகளை வைத்துக் கொண்டு அதனால் இந்த சாதனைகளை செய்திருகக இயலாது என்பதிருக்க, பெற்ற சுதந்திரத்தையும் பறி கொடுத்து நாட்டை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றி பெரும் இன்னலில் சிக்கியிருக்கும் வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது. இது போல யூகங்களை வைப்பது சரியாக இருக்காது ஆயினும் ஒப்பிட்டு நோக்க வசதியாக இருக்கும் என்பதலேயே இந்த யூகம்.

ஒருவேளை 1949-லிருந்து இந்தியாவின் சராசரி வாழ்நாள் வளர்ச்சியை சீனாவினுடையதுடன் ஒப்பிட்டால் பல மில்லியன் கணக்கானவர்களை இந்தியா கொன்று விட்டது என்று குற்றம் சாட்டலாம். இந்தியா சீனாவைப் போல மாவோவின் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இது போன்ற பல கோடிக்கணக்கானவர்களின் சாவை தடுத்திருக்கலாம் என்று இந்தியா மீது குற்றம் சாட்டலாம். உலகின் ஆகக் கொடூரமான அரசு இந்தியா என்று கட்டுரைகள் எழுதலாம். என்ன செய்ய துரதிருஷ்டவசமாக இந்தியா ஏகாதிபத்தியத்தின் அல்லக்கையாக இருப்பதால் இது போல குழந்தைத்தனமாக எழுதும் தேவை அடிவருடிகளுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ இன்னும் ஏற்ப்படவில்லை போலும். பார்ப்போம் நேபாளத்தின் வெற்றி என்னவிதமான கதைகளை இந்த உலகுக்கு கொடுக்கிறது என்பதை.


மாவோவின் மீதான குற்றச்சாட்டுகளின் தரம் என்பது இதுதான். எந்த ஒரு ஆய்வு நோக்கமோ அல்லது நேர்மையான புரிதலுக்கான ஆவலோ இன்றி, எதிர் அரசியல் சக்திகள் மீது பழி போடும் ஒரே நோக்கம் கொண்டு எழுதுவதன் விளைவு இது போல சுயமுரன்பாட்டு முட்டாள்தனங்களுக்கு வழி வகுத்து விடுகிறது.


அசுரன்